அதுல்ய வித்யா

முகப்புகருத்து / பரிந்துரைகள்

ஸ்ரீமதே இராமானுஜாய நம:

அனேக தெண்டன் சமர்பித்த தாஸஸ்ய விஞ்யாபனம். அர்ச்சாவதாரமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆலயங்கள் பல இருப்பினும், தனிச்சிறப்பு பெற்று விளங்குபவை ஆழ்வாராதிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களும், அபிமானஸ்தலங்களும் ஆகும். அப்படித் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் ,இத்தலங்களைப் பற்றிய விவரங்களையும், ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்களையும் இந்த வலைதளத்தின் மூலமாக தங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.

அதுல்ய வித்யா என்பது ஒரு வடமொழிச் சொல். “அதுல்ய” என்றால் “ஈடுஇணையற்ற”, “நிகரற்ற”, “அளவிடமுடியாத”, “தனித்தன்மை வாய்ந்த” என்ற பல பொருள்களையும் “வித்யா” என்றால் “ஞானம்” என்ற பொருளையும் நாம் அறிவோம். நாம் அனைவரும் அந்த ஈடுஇணையற்ற ஞானத்தைப் பெற நம் ஆழ்வார்களைப் பற்றியும், அவர்கள் அருளிச்செய்த பாசுரங்களைப் பற்றியும், அவர்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்யதேசங்களைப் பற்றியும் மிக எளிய முறையில் அறியும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள சிறிய முயற்சியே இதுவாகும். இதற்கு “அதுல்ய வித்யா” என்றே தலைப்பாகக் கொண்டு இதோ உங்களுக்காக...

திவ்யதேசங்களும் திவ்யபிரபந்தங்களும் – ஒரு பார்வை

நாமங்கள் ஆயிரமாயிரமுடைய நம்பெருமான், சர்வ லோக சரண்யன் ஸ்ரீமந் நாராயணன் உறையும் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை ஆகிய ஐந்தில் பரம் என்னும் பரமபதத்தை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு, உடையவர் நமக்கு அருளிய விசிஷ்டாத்வைதம் மூலம் பக்தி மார்கத்தில் ஈடுபடவேண்டும். அந்தர்யாமியாய் உருவம், அருவம் இரண்டையும் கடந்து பிரபஞ்சம் முழவதும் வியாபித்து இருக்கும் தேவாதி தேவனை உணரும் சக்தி நமக்கு இல்லை. எனவே நாம், தங்கம், வெள்ளி, கல், மரம், சாளக்கிராமம் போன்ற வஸ்துக்களால் யாதேனும் ஒரு கருப் பொருளில் நம் மனத்திற்கு உகந்தவாரும், சாஸ்த்திரங்களில் கூறிய முறை வழுவாமல் ஒரு உருவத்தை பிரதிஷ்டை செய்யும் முறைக்கு அர்ச்சை அல்லது அர்ச்சாவதார வழிபாடு என்று பெயர். அர்ச்சாவதாரமே, நம்மை நம்பெருமானிடம் எளிதில் அணுகி, அவன் திருவடிகளைச் சரணாகதியடையச்செய்து மோக்ஷ பிராப்தியை, நமக்கு அருளச்செய்யும்.

அர்ச்சாமூர்த்திகளின் முக்கிய மூன்று குணங்களான ஸௌலப்யம், ஸௌந்தர்யம், காருண்யம் (ஸௌஸீல்யம்) ஆகியவற்றை ஆழ்வார்கள் பாசுரங்கள் மூலமாக நமக்கு அருளிச்செய்துள்ளனர். நாராயண மந்திரம் மூன்று பதங்களாக இருப்பது போல், மேலான வழிபாட்டுத்தலம் என்னும் பொருளுடைய 108 திவ்ய தேசங்களை கோவில், பெருமாள் மற்றும் மங்களாசாசன பாசுரங்கள் எனும் மூன்று விதமான சிறப்புக்கள் அலங்கரிக்கின்றன. சப்த புண்யங்கள் எனும் ஏழு விதமான புண்யங்களுடன் ஆழ்வார்களின் பாசுரங்களையும் சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாக்ஷர மந்திரத்தின் பலனை தரக்கூடியவைகளாக இத் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன. அத்தகைய திவ்ய தேசங்களுக்குச் சென்று எம்பெருமானை நாம் சேவிக்கும் பொழுது, எந்தெந்த ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது என்பதையும், அந்த பாசுரங்களை அந்தந்த திவ்ய தேசங்களில் பாராயணம் செய்யவும் ஒர் அவா ஏற்படுவது இயற்கை. அவ் விருப்பத்தினை தேடுதல் ஏதும் இல்லாமல், மிக எளிய வகையில் உடனுக்குடன் தரவாகப்பெற்று நிறைவேற்றிக்கொள்ளச் செய்யும் ஒரு முயற்சியாகவே நமது இந்த வலைதளம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இப்பாசுரங்களை, ஆழ்வார்கள் சார்ந்தவையாகவும், திவ்யதேசங்கள் சார்ந்தவையாகவும், ஆழ்வார்கள் அருளிச்செய்த தொகுப்பு சார்ந்தவையாகவும், நாம் விரும்பும் வகையில் எளிமையாகப்பெற்று அனுசந்திக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள சிறு முயற்சியே இவ்வலைதளம்.

தங்களின் தனி விவரங்களை பதிவு செய்துக்கொண்டு, இவ்வலைதளத்தைப் பயன்படுத்தி திவ்ய தேச விவரங்கள் மற்றும் பாசுரங்களை அனுபவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இவ்வலைதளப் பயன்பாட்டின்போது, தங்கள் சிந்தையில் தோன்றும் அறிய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்வதின் மூலம் இவ்வலைதளம் மேலும் தனிச்சிறப்புடன் செயலாற்ற உதவவேணுமாய் பிரார்த்திதுக்கொள்வதுடன், ஏனைய தாஸர்களையும், இவ் வலைதளத்திற்கு அறிமுகப்படுத்தி, இவ்வெளிய கைங்கர்யத்தில் தாங்ககளும் பங்கு பெற வேணுமாய்ப் பிரார்த்தித்து இவ்வலைதளத்தை தங்கள் முன் சமர்பிக்கிறோம்.

அடியேன் ஸ்ரீதர தாஸன்
அடியேன் வீர்ராகவ தாஸன்